Friday, February 28, 2014
ஆட்டத்தை நிறுத்தி விட்டு இதற்குத் தானே ஆசைப்படார் சுஜா?
பூரிப்பிலிருக்கிறார் சுஜா வாருணி. அவர் கதாநாயகியாக நடித்த தெலுங்குப் படம் 'ஆலிபாபா ஒக்கடெ தொங்கா' மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
சுஜாவின் பாத்திரம் தெலுங்கு ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகியுள்ளது. ஆந்திரா முழுக்க வரவேற்பைப் பெற்றுள்ளது படம்.
திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள். பிரமாண்டமான ஹோர்டிங்குகள் என தெலுங்குதேசமெங்கும். சுஜா முகங்கள்தான்.ஹைதராபாத்தின் முக்கிய இடங்களில் மட்டுமே 75 'ஹோர்டிங்'கள் என்றால் சுஜாவின் மனம் மஜாவில் திளைக்க கேட்க வேண்டுமா என்ன?
பட அனுபவம் பற்றி சுஜா வாருணி என்ன கூறுகிறார்?
''இந்தப் படத்துக்கு முன் நான் நடித்த 'குண்டலொ கோதாவிரி' தெலுங்குப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். சந்தீப் என் ஜோடி. அந்தப்படம் எனக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. இப்போது நான் கதாநாயகியாக நடித்து இந்தப் படம் வெளிவந்துள்ளது. ''என்றவரிடம்
'குண்டலொ கோதாவிரி'யில் சின்ன ரோல்தானே? சின்ன ரோல்களில் கூடநடிப்பீர்களா.? என்றபோது
" சின்ன ரோல் என்று சீப்பாகச் சொல்லிவிட வேண்டாம். முக்கியமான ரோல் என்று கூறலாம். தேவயாணி 'பஞ்சதந்திரம்' படத்தில் நடித்திருப்பார். சின்ன ரோல்தான். எல்லாருக்கும் பிடிக்க வில்லையா? மறக்க முடியுமா அதை? அது போல் சின்ன ரோல் என்றாலும் கிறப்பாக இருந்தால் நடிப்பதில் தவறில்லை."என்றார்.
தொடர்ந்து 'ஆலிபாபா ஒக்கடெதொங்கா'பற்றிப் பேசிய சுஜா ''படத்தின் கதாநாயகன் ஆலி. சீனியர் நடிகர். அந்தப் படத்தில் நான் நடித்த போது பலரும் என்னைக் கேட்டார்கள். நீபோய் அவருடன் நடிக்கலாமா? ஒரு காமடியனுடன் முதன்முதலில் கதாநாயகியாக நடிக்கிறாயே.. என்றெல்லாம் குழப்பினார்கள். நான் கேள்விகளை பொறுமையாக எதிர் கொண்டேன். ஆனால் யார் கூட நடிப்பது என்பது எனக்கு பிரச்சினை இல்லை. நம் கேரக்டர் எப்படி என்று மட்டும்தான் பார்ப்பேன். அந்த விதத்தில் 'ஆலிபாபா ஒக்கடெ தொங்கா'அமைந்தது. அந்தப்படத்தை எனக்கு நடிக்க வாய்ப்புள்ள ஒன்றாக கருதினேன். நடித்தேன்." என்கிறார்.
தெலுங்குப் படம் வெளியான தியேட்டருக்குப் போன சுஜா தனக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணி பூரிக்கிறார்.இதற்குத் தானே ஆசைப்படார் சுஜா?
"முதன் முதலில் ஒரு ஹிரோயினாக நான் தோன்றும் காட்சிகளில் எனக்கு கிடைத்த கைதட்டல், விசில் வரவேற்பு சிலிர்ப்பாக இருந்தது.
நேரில் பார்த்த ரசிகர்களின் பரபரப்பு எனக்கு புது அனுபவம். நீங்கள் அழகா இருக்கீங்க உங்க கலர் ரொம்ப அழகு என்றும் ஹோம்லியா இருக்கீங்க என்று பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு பாராட்டியது. ஜிவ் வென்று இருந்தது. அந்த புது அனுபவம் ரொம்பவே எனர்ஜியா இருந்தது.ரீசார்ஜ் ஆன உணர்வு எனக்கு.
படத்துக்கான ப்ரமோஷனின் போது தெலுங்குத் திரையுலகினர் 'அழகா இருக்கீங்க தெலுங்கும் பேசுறீங்க.. தொடர்ந்து இங்கேயே நடியுங்கள்' என்று வரவேற்றார்கள். வாழ்த்தினார்கள். " சிரிக்கும் கண்களுடன் கூறுகிறார் சுஜா.
இந்தப்படவெற்றி அடுத்தடுத்த வாய்ப்புகளை அழைத்து வந்திருக்கிறதாம் சுஜாவுக்கு . ஐயய்யோ அப்போ தமிழ்ப் படத்தில் நடிக்க முடியாதா சுஜா?
படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் தனக்கு எல்லா விதத்திலும் முன்னுதாரணமாக இருப்பவர் வித்யா பாலன்தான் என்கிறார் சுஜா.
"இன்று இந்தியில் ஹிரோயினுக்கென்று தனியான மதிப்பும் தனியான மார்க்கெட்டும் உள்ள ஒரே நடிகை வித்யா பாலன் மட்டும்தான் என்று அடித்துக் சொல்வேன்.
வித்யா பாலனின் ஆரம்ப காலம் நிறைய தோல்விகள் போராட்டங்கள் தடைகள் கொண்டது அவருக்கான கேரக்டருக்காக காத்திருந்து தன்னை நிரூபித்தார்.அவர் 'டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த போது பலரும் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வில்லை.
திருமணம் ஆனபின்னும் அவர் தன்னை நிரூபித்தார். தன் வெற்றியின் மூலம் எல்லா விமர் சனங்களுக்கும் பதில் சொன்னவர். அவர் வழியில் செல்வது என்று தீர்மானித்தேன். வித்யா பாலன்தான் என் ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே.''
சுஜா இப்போது தனிப்பாடலுக்கெல்லாம் ஆடுவதில்லையா?
"நான் ஆட்டத்தை நிறுத்திவிட்டேன். நல்ல கேரக்டர் உள்ள நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ஏனோ தானோ ரோல்களில் நடிக்க விரும்பவில்லை."
சரியான கேரக்டர்கள் வரவில்லை என்பது படவாய்ப்பு இல்லாத நடிகைகள் கூறுவது தானே.. .?
"நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் போது இப்படிப்பட்ட விமர்சனம் வரும். கிண்டல் கேலிப்பேச்சு வரும். இது இயல்பாக வருவதுதான்.நல்ல ரோலுக்காக காத்திருக்கிறேன் என்றாலோ ஒரே மாதிரியான கேரக்டர்கள் வருகிறது என்றாலோ.. வாய்ப்புகள் இல்லை எனவே சப்பைக்கட்டு, சமாளிப்புகளாக இப்படிப் பேசுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதை நினைத்து கவலையோ பதற்றமோ படக் கூடாது. இயல்பாக எடுத்துக் கொள்ளும் தெளிவும் பொறுமையும் நிதானமும் பக்குவமும் நமக்கு இருக்க வேண்டும். அந்த முதிர்ச்சியும் தெளிவும் எனக்கு இருக்கிறது." என்கிற சுஜாவிடம் வாய்ப்புகளை வடி கட்டிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் படமே இல்லாமல் இருக்க வேண்டுமே. கிடைப்பதில் நடித்துக் கொண்டு நினைப்பதைத் தேடலாமே. ? என்ற போது
"கிடைப்பதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு அவசியமும் இல்லை. அதற்கான அவசரமும் இல்லை. இது கேட்டவர்களுக்கு சற்று மிகையாகத் தெரியலாம்.
சும்மா இருக்கிறோம் என்பதற்காக கண்ட படங்களில் நடிக்க மாட்டேன்.வருகிற வாய்ப்புகள் எல்லாம் நடிப்பது என்றால் எத்தனையோ படங்களில் நடிக்கலாம். அதில் அர்த்தமில்லை. அப்படி நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பாப்புலாரிட்டியை விட சக்சஸ்தான் முக்கியம். புகழை விட வெற்றி முக்கியம். அதுவும் அர்த்த முள்ளதாக இருக்க வேண்டும்''ஊசிப் பட்டாசாகப் வெடிக்கிறார். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
ஆடியோ வெளியீடுகளில் அவ்வப்போது தலைகாட்டு கிறீர்களே..? என்றபோது,
"நான் மனிதர்களை மதிப்பவள். நட்பை நேசிப்பவள்..யாராவது தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருவேன். நானாக எங்கும் செல்வதில்லை கிளாமராக உடை அணிந்து என்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் செய்வதில்லை'' தெளிவுடன் கூறுகிறார்.அப்படிப் போடும்மா அருவாளை!
பாசமுள்ள தமிழ்ப் பொண்ணு!- 'கங்காரு' பட கதாநாயகி ஸ்ரீபிரியங்கா
அண்ணன் தங்கைப் பாசத்துக்கு அன்று ஒரு 'பாசமலர்' என்றால் இன்று ஒரு படம் என்று சொல்ல வருகிறது 'கங்காரு'.சாமி இயக்கியுள்ள இப்படத்தின் கதை நாயகன் அண்ணன் என்றால் தங்கைதான் கதை நாயகி .
அப்படிப்பட்ட கதை நாயகியாக நடித்து நவீன சாவித்திரியாக வாழ்ந்து இருப்பவர் ஸ்ரீபிரியங்கா.
இந்த ஸ்ரீபிரியங்காவுக்கு இப்போதே இரண்டு பெருமைகள் உள்ளன. முதல் பெருமை,இவர் கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப் பட்டு 123 நிமிடங்கள் ஓடும் படம்.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைத் தேடி கேரளா மும்பை என்று செல்லும் காலத்தில் தமிழில் அறிமுகமாகியிருக்கும் தமிழ் பெண் ஸ்ரீபிரியங்கா என்பது இரண்டாவது பெருமை.
தமிழ் பேசும் தமிழ் பெண் தமிழ் சினிமாவில் எப்படி அறிமுகம் என்ற போது --
"எனக்கு சினிமாவில் ஆர்வமுண்டு.''நான் தமிழ்ப் பெண். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிதான்" என்றார் நிதானமாக.
தமிழ்ப் பெண்கள் நடிகர் நடிகைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் நடிக்க மட்டும் வரமாட்டார்கள் ஸ்ரீபிரியங்கா என்ன நினைக்கிறார்?
"சினிமா பற்றி தவறான எண்ணம் இருப்பதே இதன் காரணம். இப்போது காலம் மாறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் வந்திருப்பது போலவே சினிமாவிலும் தமிழ்ப் பெண்கள் இப்போது வர ஆரம்பித்துள்ளார்கள். இதன் பின்னணியில் பெற்றோர் இருக்க வேண்டும். எனக்கு என் பெற்றோர் ஆதரவாக இருக்கிறார்கள். என்னைத் தொடர்ந்து பலரும் வருவார்கள். "
'கங்காரு' பட அனுபவம் பற்றிப் பேசும் போது-
"இது அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.என் மீது பாசமுள்ள அண்ணன். அவரை ஊரில் எல்லாரும் 'கங்காரு' என்றுதான் அழைப்பார்கள். அந்த கங்காரு பாசத்துடன் தூக்கிச் சுமக்கும் தங்கைதான் நான்.
என் அண்ணன் ஊருக்கே அடங்காத முரட்டு கங்காரு, தன் தங்கையின் வார்த்தைக்கு மட்டும் அடங்கும். எங்களுக்குள் நடக்கும் பாசமுள்ள சம்பவங்கள் தான் கதை.எனக்கு இரண்டு பாடல்கள் காதல் டூயட்டும் உண்டு அண்ணனுடன் பாசப் பாட்டும் உண்டு
.அண்ணன் தங்கை பாசம் என்றால் இன்றும் ஒரே முன் மாதிரி 'பாசமலர்' படம்தான். அதில் சாவித்திரியம்மா பாசமுள்ள தங்கையாக வாழ்ந்திருப்பார். அவரும் பெரிய கதாநாயகிதான். இருந்தாலும் அந்த தங்கை பாத்திரம் மூலம் எல்லார் மனதிலும் அழுத்தமாக உட்கார்ந்து விட்டார். அதே போல இந்தப் படமும் எனக்கு அமையும் " என்கிறார் நம்பிக்கையுடன். ஸ்ரீபிரியங்காவுக்கு நிஜத்தில் சகோதரன் உண்டா?
"உண்டு என் அண்ணன் என் மீது பாசம் உள்ளவன்தான். ஆனால் பெரிதாக வெளிக் காட்ட மாட்டான்.
சண்டை சச்சரவு எங்களுக்குள் வரும். ஆனால்.. நான் கங்காரு படப்பிடிப்புக்கு ஒரு மாதம் கொடைக்கானல் போயிருந்தேன். அப்போது என்னை பிரிந்திருந்ததை.. மிஸ் செய்து இருந்ததை நேரில் பார்த்த போது கூறியபோது எனக்கும் புரிந்தது 'அருகில் இருக்கும் போது புரியாத பிரியம் பிரிவில் இருக்கும் போது புரியும்' என்று."என்கிறார்
அட என்னமா பேசுதுப்பா இந்த தமிழ்ப் பொண்ணு.
ஸ்ரீபிரியங்காவின் அபிமான நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவ கார்த்திகேயனாம். நடிகைகளில் ஸ்ரீதேவி முதல் ஸ்ரீதிவ்யா வரை பலரையும் பிடிக்குமாம்.
தங்கையாக நடிக்க கதாநாயக நடிகைகள் தயங்குவார்களே, ஸ்ரீபிரியங்கா மட்டும் எப்படி ஒப்புக் கொண்டார்?
"தங்கை கேரக்டருக்கே தனி மரியாதை வாங்கித் தந்த 'பாசமலர்' சாவித்திரி முதல் 'முள்ளும் மலரும்' ஷோபா, 'கிழக்குச் சீமையிலே' ராதிகா வரை எத்தனையோ நடிகைகள் தங்கச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே பிரபலமான. கதாநாயகிகள் தானே..? "என்று புள்ளிவிவரம் தருகிறார் ஸ்ரீபிரியங்கா,
"கங்காரு படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். என் கேரக்டரும் பிடிக்கும். ஒவ்வொரு கதாநாயகிக்கும் இப்படிப்பட்ட தங்கையாக நடிக்க ஆசை வரும். "என்கிறார்.
கங்காரு படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவே ஒரு குடும்பம் போல இருந்ததை மகிழ்வுடன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தவர், பட வெளியீட்டு தேதிக்கு ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறுகிறார்.
இன்றைக்கு கதாநாயகி நடிகைகளுக்குள் இருக்கும் கவர்ச்சிப் போட்டியில் இந்த தமிழ்ப் பொண்ணு தாக்குப் பிடிக்குமா?
"எனக் கென்று சில வரைமுறைகள் வைத்திருக்கிறேன். அதை மீறாதபடி வரும் வாய்ப்புகளில் நடிக்கத் தான் போகிறேன் பாருங்கள்.''என்கிறார்.
வாய்ப்புகளை அவர் பார்த்துக் கொள்வார். வாழ்த்துக்களை நாம் கூறலாம் தானே?.
Subscribe to:
Posts (Atom)