தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். ஆந்திரா போய் தெலுங்கில் 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள். இவர் ஐந்து படங்கள் மாநில அரசின் விருதுகளைக் குவித்த படங்கள்.
'ஆனந்த்' படவெற்றிக்குப் பின் 'ஆனந்த்' ராஜா என்று அழைக்கப்பட்டார்.
அந்த ராஜா தமிழ்நாட்டு ரோஜாவை தன் இதயத்தில் செருகப் போகிறார். ஆம் ராஜாவுக்குத் திருமணம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகள் அம்ரிதாவை மணக்கிறார். அம்ரிதா தகவல் தொடர்பு பட்டம் முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ராஜாவை சித்தப்பா சந்திரமௌலி பெற்றோர் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிறார்.
இது இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். 25-4-2014 மாலை 5 மணிக்கு நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் திருமணமும் சென்னை-28,எம்.ஆர்.சி.நகர்,லீ லா பேலஸ், ராயல் பால்ரூமில் மாலை7.30மணி முதல் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
திருமணத்தை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் ராஜா.
அவர் பேசும்போது
''நான் இப்போது மூன்று விஷயத்துக்காக பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் தமிழ்நாட்டு பத்திரிகை மீடியாவினரை இன்றுதான் நேரில் சந்திக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி.
இன்னொன்று என் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எனக்கான சரியான வாழ்க்கைத் துணை கிடைத்துள்ளது. அந்தச் செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
மூன்றாவதாக தமிழ்ப் படங்களில் நடிக்க நான் பெரிதும் ஆவலாக இருக்கிறேன். நிறைய நிறைவான படங்கள் தமிழில் செய்ய விரும்புகிறேன்.
இந்த மூன்று விஷயத்துக்காக இன்று நான் ரொம்ப சந்தோஷப் படுகிறேன்'' என்றவர், தொடர்ந்து பேசும்போது
''எனக்கு பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். அப்பா சிறுவயதிலேயே ஆந்திராவில் செட்டிலானதால் என்படிப்பு அங்குதான் முடிந்தது. நான் எம் பி.ஏ. படித்தேன்.
தெலுங்கில் அறிமுகமாகி இதுவரை 32 படங்கள் நடித்துள்ளேன். 10 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். அதில் 5 படங்கள் மாநில அரசு விருது பெற்றுள்ளன. எனக்கு அன்பான இடத்தை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்து ள்ளார்கள்.
நான் மீடியா மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானேன். மீடியா இல்லை என்றால் நான் இல்லை. நான் மீடியாவின் நடிகன். இதை சொல்வதில் எனக்குப் பெருமைதான்.
நான் தமிழில் 'கண்ணா' 'ஜகன்மோகினி' படங்களில் நடித்திருக்கிறேன்.
என் திருமணம் தாமதமானாலும் சரியான வாழ்க்கைத் துணை கிடைத்துள்ளது கடவுள்செயல்.''
ரஜினியைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்து பெற்றிருக்கிறார். ராஜா அந்த அனுபவம் பற்றிக் கூறும் போது
''என் மாமனார் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் குடும்பத்துக்கு பல ஆண்டுகள் பழக்கமானவர்கள். அந்த வகையில் ரஜினிசாரை சந்தித்தேன். ஆசீர்வாதம் செய்தார்.
நான் அவரைச் சந்தித்தபோது என்னையே என்னால் நம்ப முடியவில்லை.எனக்கு பேச்சே வரலை, அவர்தான் பேசி ஊக்க மூட்டினார். சிறுவயதில் போயஸ் கார்டனில் நடந்து கொண்டு இதுதான் ரஜினிசார் வீடு என்று ஏக்கத்துடன் பார்த்ததுண்டு. அப்படிப்பட்ட ரஜினிசார் என்னை வரவேற்று அன்புடன் பேசி அக்கறையுடன் விசாரித்து நீ நல்லா வருவே என்று வாழ்த்தியது மறக்க முடியாது.'' என்றவரிடம் மனைவி சொல்லே மந்திரமாக திருமணத்துக்கு பிந்தைய திட்டம் உண்டா எனக் கேட்ட போது,
''ஹைதராபாத்தைப் போல சென்னையிலும் ஒரு அடித்தளம் அமைக்க வேண்டும். அதற்கு தமிழில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும்.'' இவ்வாறு கூறினார் நடிகர் ராஜா. என்கிற ராஜா கிருஷ்ண மூர்த்தி.
No comments:
Post a Comment