இந்திய சினிமாவில் நல்ல மாற்றங்கள் எப்போதும் நிகழ்வதுண்டு. அதே போல் தமிழ் சினிமாவிலும் மாற்றங்கள் சகஜமே. அப்படி ஒரு நல்ல மாற்றம் கூடிய விரைவில் நிகழும் என்கிறது கோடம்பாக்கம். அது ஒரு ஆச்சரியமான செய்தியும் கூட.
தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.
'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். கமர்ஷியல் படங்களை இயக்குவதிலும், வித்தியாசமான படங்களை இயக்குவதிலும் வல்லவர். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் 'நான் மகான் அல்ல, பாண்டிய நாடு'. 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர்.
கடந்த ஆண்டு வெளிவந்த 'ஆதலால் காதல் செய்வீர்', படமும் வித்தியாசமான படம் என்று விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேர பாராட்டைப் பெற்றது. தற்போது , விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க 'ஜீவா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
2003ல் வெளிவந்த 'புன்னகை தேசம்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் மதி. தொடர்ந்து "வெயில், நேபாளி, சிலம்பாட்டம், பையா, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, என்றென்றும் புன்னகை' உட்பட பல தமிழ்ப் படங்களுக்கும், ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சைத்தான் படத்திற்கும், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'மிர்ச்சி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
"மௌனம் பேசியதே, காக்க காக்க, மன்மதன், வேட்டையாடு விளையாடு, வல்லவன், சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, நான் மகான் அல்ல, சிறுத்தை, 7ம் அறிவு, மாற்றான், தங்க மீன்கள், பாண்டிய நாடு" என ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு கலை இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜீவன். தற்போது தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் பரபரப்பாய் இயங்கி வருகிறார்.
சுசீந்திரன், மதி, ராஜீவன் மூவரும் இணைந்து "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு" படங்களில் பணி புரிந்திருக்கிறார்கள்.
சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் சினிமாவை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இவர்கள் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளது, தமிழ் சினிமாவிற்கு மேலும் பல வெற்றிப் படங்களைத் தரும் என்பது வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment